முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று ஒரேநாளில் மின்னல் தாக்கியும், ஓடையில் விழுந்தும் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வருகிற 21-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் கொச்சி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையின்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
கேரளாவின் திருவனந்தபுரம், மலப்புரம், வயநாடு, எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் படகு மூலம் அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்குள்ள நீர் நிலைகள் பெருகி உள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒரேநாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். கோட்டயம் பகுதியை சேர்ந்த ஆலன்ஜினு (வயது 14) ஓடையில் தவறி விழுந்தும், கோழிக்கோடை சேர்ந்த தீபு (34) குளத்தில் மூழ்கியும் பலியானார்கள். ஆலப்புழாவை சேர்ந்த பாபு (62), மலப்புரம் பத்ரோஸ் (44) ஆகியோர் மின்னல் தாக்கியதால் பலியானார்கள்.

அதே போல கொல்லத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (62) மரம் விழுந்தும், மலப்புரத்தை சேர்ந்த நாராயணன் (73), கொச்சியை சேர்ந்த முகம்மது ரகீம் (22) ஆகியோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானார்கள்.

பலத்த சேதம்
கேரளாவில் கடலும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழிஞ்ஞம் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகப் பணியும் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலமும் கடல் சீற்றம் காரணமாக இடிந்து கடலில் விழுந்து விட்டது. இதை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதே போல சிறையின்கீழ், பூத்துறை ஆகிய பகுதிகளிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இங்கு கடல் நீர் கடற்கரை கிராமங்களுக்குள் புகுந்ததில் பூத்துறையில் 16 வீடுகளும், சிறையின்கீழ் பகுதியில் 4 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்தன. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து