முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி நிதிநிறுவனத்தை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் மோசடி நிதி நிறுவனத்தை கண்டித்து ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் _ நத்தம் ரோட்டில் குள்ளனம்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், மேட்டுப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிதி நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தனர். அதனைப் பார்த்து திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களிடம் தலா ரூ.1.20 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும், பணியில் சேர்ந்து முதல் 3 மாதம் ரூ.5,500 சம்பளம் தரப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் 6 மாதங்கள் கழித்து கட்டிய டெபாசிட் தொகையை திரும்ப வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். அதனை நம்பி 35 பேர் வேலையில் சேர்ந்தோம். ஆனால் நிறுவனம் சார்பில் ரூ.2 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது.
மேலும் நாங்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து இந்த நிதி நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்த்தோம். அதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.500 முதல் ரூ.1500 வசூலிக்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி வழங்குவதாக பல்வேறு நபர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்தோம். ஆனால் கடந்த 4 மாதமாக நிதி நிறுவனம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டு விட்டது. உரிமையாளர் மற்றும் மேலாளரின் தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுமார் ரூ.80 லட்ம் வரை ஏமாற்றி சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நகர் வடக்கு போலீசார் நிதி நிறுவன உரிமையாளர் கருணாகரன், இயக்குனரான காவேரி நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி, மேலாளர் பிரஜீத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையிலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் எங்களிடம் பணம் கேட்டு நெருக்குவதால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து