முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மட்டம் 103 அடியை தாண்டியது: பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் - டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதல்வர் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில்,போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதன்மூலம் காவிரி படுகையில் 700 ஏரி, குளங்கள் நிரப்பப்பட்டு அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்துவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார். இதேபோல், சம்பா சாகுபடிக்காக நீண்ட கால நெல் ரகங்களை அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கவும், டிஏபி, யூரியா, காம்ப்ளெக்ஸ் போன்ற ரசாயன உரங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

மலர்தூவி வழிபாடு

மேலும், அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு 100 அடியைத் தாண்டியது. இதையடுத்து, விவசாயிகள் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

7 அடி உயர்ந்தது

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதே போல கேரளாவில் வயநாடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 81 ஆயிரத்து 841 கன அடி என மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. தமிழகத்திற்கு வரும் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 102.68 அடியாக உயர்ந்து பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்மட்டம் உயர்வு

ஒகேனக்கலில் ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக வரும் தண்ணீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி மேட்டூர் அணை நோக்கி வருகிறது. இதனால் காவிரி கரையில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்று முன்தினம் 95.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 102.68 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தட்சிணாய புண்ணிய நதியான காவிரியில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புண்ணிய கால தொடக்கமான ஆடி மாதம் 1-ம் தேதியே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை கட்டி 83 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன்தினம் 64 வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தண்ணீர் திறப்பு

இதற்கிடையே நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை அடுத்து அணையின் இடது கரையில் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் மதுசூதனன் மற்றும் ஊழியர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, அன்பழகன், கருப்பண்ணன், விஜயபாஸ்கர் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து