முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து ஜெயலலிதா எங்களையும், தமிழக மக்களையும் வழிநடத்துகிறார் சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களையும், தமிழ்நாட்டு மக்களையும் வழி நடத்தி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

ஆச்சார்ய ஸ்ரீ மஹாஸ்ரமண் சதுர்மாஸ் பிரவாஸ் விழா சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கருவறை....
இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் தமிழ்நாடு. மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழ்நாடு. பக்தியும் அறமும் தழைத்து விளையும் புண்ணிய பூமி தமிழ்நாடு. பல்வேறு இடங்களில் இருந்து ஞானிகளும், மகான்களும், குருமார்களும், ஆன்மிகத் தேடலுக்காகவும் அமைதிக்காகவும் தமிழ்நாட்டுக்கு வருகை தருவது என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் சிறப்பாகும். இதன் அடிப்படையில் நல்லெண்ணம், அஹிம்சை, போதை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்று தமிழ் மண்ணில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தவநெறியாளர் மகாஸ்ரமண் அடிகளாரை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகின்றேன்.

சிறப்பு விருந்தினர்...
50 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1968-ம் ஆண்டு துளசி அடிகளார் உலக அமைதிக்காக நடைபயணம் மேற்கொண்டு, முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது, அன்று முதலமைச்சராக இருந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ் நாட்டு மக்களின் சார்பாக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருந்தினர் என்ற அந்தஸ்தை அடிகளாருக்கு அளித்து வரவேற்றார்.

வரவேற்கிறோம்...
அண்ணா வழியில், எம்.ஜி.ஆரின் ஆசியில், ஜெயலலிதாவின் உழைப்பில் அமைந்த அரசு, இன்று மகாஸ்ரமண்ணை வரவேற்று சிறப்பிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. அண்ணா தமிழ்நாட்டின் சிறப்பு விருந்தினர் என்ற சிறப்பை தவத்திரு துளசி அடிகளாருக்கு எப்படி அளித்தாரோ, அதைப் போலவே துளசி அடிகளாரின் சீடரான மகாஸ்ரமண் தமிழ் நாடு அரசின் சிறப்பு விருந்தினர் என்ற சிறப்பை அளித்து  நாங்கள் வரவேற்கிறோம். பிறர் நலனுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் ஞானிகளைத்தான் இந்த உலகம் வரவேற்று, போற்றுகிறது. ஒவ்வொருவருக்கும் தாய் தந்தை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு குருவும் முக்கியமானவர்.

குருவாக ஜெயலலிதா...
இன்று மக்கள்நல நோக்கத்துடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள மகாஸ்ரமணார் 800-க்கும் மேற்பட்ட துறவியர்களையும், பல்லாயிரக்கணக்கான சீடர்களையும் வழிநடத்தி வருகிறார். அவர்களைப் போலவே, ஜெயலலிதா எங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து எங்களையும், தமிழ்நாட்டு மக்களையும் வழி நடத்த வருகிறார். குரு நிலையில் வைத்துத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் போற்றி துதிக்கின்றோம். துளசி அடிகளாரைப் போல, அவருடைய சீடர் மகாஸ்ரமணை போல, மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அடிகளாரின் வழி ஆன்மிக வழி, ஜெயலலிதாவின் வழி அரசியல் வழி. இரண்டு வழிகளும் சேரும் இடம் ஒன்றுதான் - அதுதான் மக்கள் நலம் காக்கும் அறம் ஆகும்.

தமிழகத்திற்கு...
தோன்றும் பொருட்கள் யாவும் ஒரு நாள் அழியக் கூடியதே. எனவே உடல் நலமாக உள்ள போதே வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை தரும் அறச் செயல்களை ஜெயலலிதாவை போல் செய்ய வேண்டும். மகான்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவர்களுடைய அறவழியில் நடந்தால், தனி மனிதனுக்கு துன்பமோ, நாட்டுக்கு குழப்பமோ ஏற்பட வாய்ப்பில்லை. வெளிநாட்டினர் மன அமைதிக்காக ஞானிகளையும் மகான்களையும் குருமார்களையும் தேடி இந்தியாவிற்கு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடுதான் அவர்களுக்கு சரணாலயமாக திகழ்கிறது.

பெருமையாக...
இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் நடந்து வரும் தீமைகளையும்,இழிவான செயல்களையும்,தங்களுடைய தூய போதனைகளால் தடுத்து நிறுத்தி, மனிதனை செம்மைப்படுத்தும் நற்பணிகளை மேற்கொண்டு வருகின்ற, போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய மகாஸ்ரமண்,தம் சீடர்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். மகாஸ்ரமண் அகிம்சை நடைப்பயணம் வெற்றி பெறவும், அவரது அறப்பணி தொடர்ந்து நடைபெற்று, மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்றும் நான் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து