முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல் முறையாக வாட்டர் ஏ.டி.எம். அறிமுகம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம்  : தமிழகத்தில் முதல் முறையாக நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் பயணித்திடுவோரின் வசதிக்காக மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பகுதியில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டால் ஒரு லிட்டர் தூய குடிநீர் வழங்கிடும் வாட்டர் ஏ.டி.எம். மையத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிடும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நான்கு வழிச்சாலைகளில் வாகனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. குறிப்பாக தொலைதூர வாகனப் பயணங்களை மேற்கொண்டு வருபவர்களுக்கு சாலையோரங்களில் கழிவறை வசதியுடன் கூடிய ஓய்வெடுக்கும் வசதி, விபத்து மீட்பு ஆம்புலன்ஸ் வசதி, அவசர அழைப்பிற்கான தொலை தொடர்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் வாகனங்களில் தொலைதூர பயணம் மேற்கொண்டு வருபவர்கள் குடிநீர் கிடைக்காததால் கூடுதல் விலை கொடுத்து தரமற்ற குடிநீர் பாட்டில்களை வாங்கி அருந்திட வேண்டிய அவல நிலை உள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள நான்குவழிச் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் தங்களை புத்துணர்வு செய்து கொள்வதற்காக சிற்றுண்டியுடன் குளிர்பானங்களை விற்பனை செய்திடும் நெஸ்ட்(மினி) எனும் புத்துணர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கழிவறை வசதியுடன் கூடிய இந்த சாலையோர புத்துணர்வு மையங்களில் தற்போது வாகனங்களில் பயணம் மேற்கொள்வோரது தாகத்தை தீர்த்திடும் வகையில் ஒரு ரூபாய் நாணயம் போட்டால் ஒரு லிட்டர் தூய குடிநீர் வழங்கிடும் அதிநவீன வாட்டர் ஏ.டி.எம். மிஷின்கள் நிறுவப்பட்டு வருகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தூய குடிநீர் வழங்கிடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மற்றும் அல்ட்ரா வயலட் முறையில் இந்த இயந்திரத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்படுவதால் உத்தரவாதத்துடன் தூய குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் முதல் முறையாக திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பகுதியில் நான்குவழிச் சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நெஸ்ட்(மினி) புத்துணர்வு மையத்தில் ஒரு ரூபாய் நாணயம் போட்டால் ஒரு லிட்டர் தூய குடிநீர் வழங்கிடும் இரண்டு வாட்டர் ஏ.டி.எம். இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாகனங்களில் தொலை தூர பயணம் மேற்கொள்வோர் இந்த புத்துணர்வு மையத்தில் இளைப்பாறி விட்டு வாட்டர் ஏ.டி.எம்.-மில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் என தேவையான அளவு தண்ணீர் வாங்கிடலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் விநியோகிக்கப்படும் பிரீபெய்டு கார்டுகளை பணம் கொடுத்து வாங்கி இந்த வாட்டர் ஏ.டி.எம்.-கள் முன்பு காட்டி உரிய பட்டன்களை அழுத்தினால் தேவையான குடிநீர் விநியோகம் செய்திடும் வசதியும் இந்த வாட்டர் ஏ.டி.எம்.-மில் உள்ளது. விரைவில் தனது பணியை தொடங்கிடவுள்ள இந்த வாட்டர் ஏ.டி.எம்.-கள் பொதுமக்களுக்கும் தொலைதூர பயணம் மேற்கொண்டு வருபவர்களுக்கும் வரப்பிரசாதமாக திகழ்ந்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து