முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறு மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் போது அனுமதி இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆறு மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் போது, அனுமதி இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 4 பேர் உட்பட 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஒரு லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் வேதனை...

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கோல்நாயக்கன்பட்டி கிராமம், ரெட்டியூர் காவேரி ஆற்றுப் பகுதியில் 22.7.2018 அன்று கோல்நாயக்கன்பட்டி கிராமம் மற்றும் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள்  காவேரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை  பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

சடமாக மீட்பு...

எனது உத்தரவின் பேரில்,  மாவட்ட ஆட்சியர்,  காவல் துறை, மருத்துவத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கோபால் என்பவரின் மகள் தனுஸ்ரீ -ஐ பத்திரமாக மீட்டனர்.  ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குளிக்கச் சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட  நான்கு நபர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன.

இரங்கல் - அனுதாபம்...

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழவளவு உள்வட்டம், கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ள குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில்  22.7.2018   அன்று குளிக்கச் சென்ற மேலூர் டவுன் வெள்ளத்தான்பட்டியைச் சேர்ந்த சக்கரை முகம்மது மகன்கள் சதாம் உசேன் மற்றும் சலீம் ஆகிய இரண்டு நபர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேடான பகுதிக்கு...

மேட்டூர் அணையில் நீர் திறந்தவுடன், சம்பந்தப்பட்ட காவேரி கரையோர மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். எனது உத்தரவின் பேரில், நீர் திறப்பு காலங்களில், காவேரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், நீர் வழித்தடங்கள் மற்றும் அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்,  மேடான பகுதிக்குச் செல்லுமாறும், குழந்தைகளை நீர்நிலைகளில் அனுமதிக்காமல் இருக்கும் படியும் தண்டோரா, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக மாவட்ட நிர்வாகங்கள்  முன் எச்சரிக்கை செய்திகளை விடுத்து வருகிறது.

எச்சரிக்கையாக...

எனினும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற  துயரச் சம்பவங்கள் ஏற்படா வண்ணம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்,  ஆறு மற்றும் ஏரியில் குளிக்கச் செல்லும் போது, அதற்குரிய  பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளிக்கவும்,  அனுமதி இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொது மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின்  குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய்   வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து