முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்பு பணிகள்: உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு அமைச்சர் ஜெயகுமார் மறுப்பு - கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகள் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டதற்கு அமைச்சர் ஜெயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

2012-2013-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம்,  கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்தகாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்கும் (பர்பார்மன்ஸ் பேஸ்டு மெயின்டன்ஸ் கான்ட்ராக்ட் )என்ற  செயல்பாட்டுஅடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுது பார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், அவசர கால சீரமைப்புப பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்புச் சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளை மட்டும் அல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லை கற்கள் அமைத்தல், விபத்துக்களை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியிடுகள் அமைத்தல், சாலை ஓரப் புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத் தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் ஒப்பந்தகாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்திட வேண்டும். மழைக் காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்தகாரர் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இந்த பராமரிப்பு ஒப்பந்தத்தின் இன்றியமையாத அம்சமாகும்.  இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவதற்கு தேவையான உதவிகள் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதென உலக வங்கி மதிப்பீட்டிருப்பதுடன், பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திட்டத்தில் பெருமளவு நிதி முறைகேடு நடந்திருப்பதாக நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். இச்செய்தியில் 8 கி.மீ. நீள சாலையை இரண்டு சாலைப் பணியாளர்கள் வீதம் 43 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன் மூலம் ஐந்து ஆண்டுகள் பராமரிப்பு பணி மேற்கொண்டாலும், ரூபாய் 10 கோடி செலவில் சாலைகளை பராமரிக்க முடியும். ஒரு கோட்டத்திற்கு ரூபாய் 100 கோடி செலவு செய்தாலும் மொத்தம் 5 கோட்டத்திற்கு ரூபாய் 500 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ரூபாய் 2083 கோடி வரை தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நடைமுறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு அச்செய்திதாளில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண பராமரிப்புப் பணிகளுக்கான தொழிலாளர் ஊதியத்திற்கான மதிப்பீட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்துடன் ஒப்பீடு செய்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது சாலை பராமரிப்பில் தொடர்புடைய ஒப்பந்தத்தில்  அடங்கியிருக்கும் ஏராளமான பணிகளை கருத்தில் கொள்ளாமல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக நிதி முறைகேடு என தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, பொள்ளாச்சி கோட்டத்தில் முதல் நில சீரமைத்தலில் 153 கி.மீ நீளச்சாலை ரூபாய் 104 கோடியிலும், முதலாண்ட காலமுறை புதுப்பித்தலில் 28 கி.மீ. நீளச் சாலை ரூபாய் 12.24 கோடியிலும், இரண்டாமாண்டு காலமுறை புதுப்பித்தலில் 55.30 கி.மீ. நீளச்சாலை ரூபாய் 24.40 கோடியிலும், மூன்றாமாண்டு காலமுறை புதுப்பித்தலில் 141 கி.மீ. நீளச்சாலை ரூபாய் 68.89 கோடியிலும் என ரூ.204 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சாலைப் பாதுகாப்பு பணிகள் ரூபாய் 13.89 கோடி மதிப்பிலும், பராமரிப்பு பணிகள் ரூபாய் 33.61 கோடி தொகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் உள்ளடக்கி செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், செய்தித்தாளில் சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூற மதிப்பீட்டை மட்டும் சுட்டிக்காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பொள்ளாச்சி கோட்டத்தில் 377 கி.மீ. சாலைகளை பராமரிக்க 8 கி.மீ. நீளமுள்ள சாலைக்கு 2 பேர் வீதம், 94 சாலைப் பணியாளர்களும், 25 கி.மீ. சாலைக்கு ஒருவர் வீதம், 15 சாலை ஆய்வாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும். மேற்காணும், 109 பணியாளர்களுக்கு சராசரியாக மாத ஊதியம ரூபாய் 32,000/- வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 20.93 கோடி வழங்கப்பட வேண்டும். மேலும், சாலை பராமரிப்பிற்கான சாலையின் இருபுறமும் மண் வடிகால் அமைத்தல், சாலை மையத் தடுப்பாண்களில் கருப்பு, வெள்ள வர்ணம் பூசுதல் மற்றும் சாலையில் ஏற்படும் நொடிகள் மற்றும் பள்ளங்களை சீர் செய்வதற்காக பயன்படுத்தப்படும் தார், ஜல்லி போன்ற பொருட்களின் விலை மற்றும் கருவி தளவாடங்கள் மற்றும் வாகனங்களின் வாடகைக்கான தொகை வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 6.00 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 30.00 கோடி ஆகும், மொத்தம் ரூபாய் 50.93 கோடி செலவாகும். இதில் பொள்ளாச்சி கோட்டத்தை பொறுத்தவரை ரூபாய் 36.46 கோடி மட்டும் ஒப்பந்ததாரருக்கு வழங்க வழிவகை உள்ளதால் அரசுக்கு, ரூபாய் 16.47 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, பொள்ளாச்சி கோட்டத்தின் சாலைகளை செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் மூலம் பணி மேற்கொள்ளாமல், தனித் தனியாக திட்டப் பணிகள் மூலம் 377 கி.மீ. நீள சாலைகள மேம்படுத்தியிருந்தால் 278 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டிருக்கும். எனவே, ரூபாய் 55.46 கோடி அரசுக்கு சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் பொள்ளாச்சி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் கோட்டங்களில் செயல்படுத்துவதால் அரசுக்கு ரூ 527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. சாலைகளை செம்மையாக பரரமரிக்கவும், உடனுக்குடன் பழுது நீக்கவும், மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை களையவும், செப்பனிடவும் அறிமுகம் செய்யப்பட்டு, அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையினால் அரசுக்கு நிதி சேமிப்பு உண்டாகிறது என்றும், நிதி இழப்பும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் முறையில் செயல்படுத்தப்படும் ஒப்பந்த முறை குறித்து  அந்த செய்தித் தாளில் 22-ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து