Idhayam Matrimony

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, : தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் குரலை உயர்த்தி வாதிட்டதற்காக மனுதாரரின் வழக்கறிஞரை நீதிபதிகள் கண்டித்தனர். 

மனுத்தாக்கல்...

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் கடந்த 1992-ல் தீர்ப்பு அளித்துள்ளது.
 

50 சதவீத இட...

ஆனால், தமிழகத்தில் மட்டும், 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். அதோடு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும். கூடுதல் இடம்  ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், கே.எம். விஜயன், ஜி. சிவபால முருகன் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர், சேகர் நாப்தே மற்றும் யோகேஷ் கண்ணா ஆஜராகினார்.

மனு தள்ளுபடி...

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். கூடுதல் சீட் ஒதுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் விஜயன் குரலை உயர்த்தி வாதிட்டதாகவும், நீதிமன்றத்தில் அவ்வாறு வாதிட கூடாது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

ஜெயலலிதாவால்...

1994-ம் ஆண்டு தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1991 முதல் 1996 வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியில் இருந்தது. அந்த அரசுதான் இந்த சிறப்பு சட்டத்தை இயற்றி 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. காவிரி பிரச்சினை முதல் முல்லை பெரியாறு பிரச்சினை வரை அனைத்திலும் வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரே இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையையும் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து