வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுவதில்லை என்ற விமர்சனங்களை தகர்த்தெறிந்தனர் : கேப்டன் விராட் கோலி, அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
virat Kohli-ashwin-2018 08 03

Source: provided

பர்மிங்காம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அஸ்வின் மற்றும் விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுவதில்லை என்ற விமர்சனங்களை தகர்த்தெறிந்துள்ளனர்.

134 ரன்கள்...

இந்தியா அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடும்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இந்த தொடரின்போது விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் அஸ்வினும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதனால் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இடம் கிடைக்குமா?

தற்போது அவருக்கு ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை பயன்படுத்தி கவுன்ட்டி போட்டியில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் விராட் கோலி அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆடும் லெவனில் சேர்த்தார்.

4 விக்கெட்டுக்கள்...

விராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அஸ்வின் அபாரமான வகையில் பந்து வீசி முதல் நாளில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவரது பந்து வீச்சால் இங்கிலாந்து 287 ரன்னில் சுருண்டது. கடந்த சீசனில் மூன்று விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்திய அஸ்வின், ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் 10 இன்னிங்சில் 134 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி 2-வது நாளில் 149 ரன்கள் குவித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நாளில் தங்களது விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து