முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டர்-20 கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

வேலன்சியா : ஸ்பெயினில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூ-20) கால்பந்து போட்டியில் 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை 10 வீரர்களுடன் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினாவை...

ஸ்பெயின் நாட்டில் 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் காட்டிஃப் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடந்த போட்டி ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர் கொண்டது.  இந்த போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் தீபக் டாங்ரி இந்திய அணிக்கான முதல் கோலை போட்டார்.  தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டன.  எனினும் அது பலன் தரவில்லை.  இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

சிவப்பு அட்டை...

இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஜாதவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.  இதனை அடுத்து அவர் அணியில் இருந்து வெளியேறினார்.  இதனால் 10 வீரர்களுடன் இந்திய அணி போட்டியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 68வது நிமிடத்தில் இந்திய வீரர் அன்வர் அலி ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார்.  தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.  அந்த அணி 56வது நிமிடம் மற்றும் 61வது நிமிடத்தில் கோல் அடிக்க நடந்த முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் கில் தடுத்து விட்டார்.  அதன்பின் அர்ஜென்டினா அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது.

இந்தியா வெற்றி...

போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. கடந்த போட்டிகளில் முர்சியா அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் மற்றும் மொரீசேனியா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது.  வெனிசூலா அணியுடன் கோல்கள் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தினை சமன் செய்தது. இந்த நிலையில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஸ் பட்டத்திற்கான கால்பந்து போட்டிகளில் 6 முறை கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து