சமூக நீதி நாட்கள் வரும் 15-ம் தேதி முதல் 30 வரை கடைப்பிடிக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
pm modi 2017 8 20

புது டெல்லி : பா.ஜ.க. சார்பில் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி நாள்கள் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, மேற்கண்ட மசோதா தொடர்பாக அவர் பெருமிதம் தெரிவித்ததாக, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக, பா.ஜ.க. சார்பில் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி நாள்கள் கடைப்பிடிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பா.ஜ.க. சார்பில் ஆகஸ்ட் 1 முதல் 9 வரை சமூக நீதி வாரம் கடைப்பிடிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார்.

நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் காலங்களில் சமூக நீதிக்கான கூட்டத் தொடர் என்று நினைவுகூரப்படும் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த மசோதாக்களை நிறைவேற்றியமைக்காக, பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் மத்திய அமைச்சர் அனந்த குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து