முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மறைவு: அமித்ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இரங்கல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெங்கய்யா நாயுடு:

80 ஆண்டுகால பொதுவாழ்வில் தனக்கென ஒரு அழியாத் தடத்தை பதித்துச் சென்றிருக்கிறார் கருணாநிதி. பன்முகத்தன்மையும், போர்க்குணத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த கருணாநிதி, மாநிலக் கட்சியின் தலைவராக இருந்தாலும், தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

கேரள ஆளுநர் சதாசிவம்:

கருணாநிதி முதல்வராக பதவி வகித்தபோது கொண்டுவந்த ஒவ்வொரு திட்டமும், பிற்படுத்தப்பட்டோர், சமூகத்தில் நலிந்த பிரிவினரை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை பிரதிபலித்தது. அவரது இழப்புக்கு ஆறுதல் கூறுவதை வெறும் வார்த்தைகளால் அடக்கிவிட முடியாது.

பினராயி விஜயன்:

தேசிய அளவில் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவர் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், திரைக்கதை ஆசிரியர் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் கருணாநிதி.

எல்.கே.அத்வானி:

மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி, உயர்வான குறிக்கோள்களை கொண்டிருந்தவர். அரசியலில் சிறந்து விளங்கிய அவர், தமிழுக்காகவும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

ராகுல் காந்தி:

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் கருணாநிதி. இந்தியா தனது சிறந்த மகனை' இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அமித் ஷா:

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் (1975ஆம் ஆண்டு) கருணாநிதியின் போராட்டத்தை யாராலும் மறந்து விட முடியாது.

தருண் விஜய்:

சமூக நீதிக்கான போராட்டத்துக்கு வித்திட்டவர் கருணாநிதி. தமிழுக்கும், திருவள்ளுவரின் படைப்புகளுக்கும் ஆதரவாக நான் மாநிலங்களவையில் பேசியபோது, அவர் ஆதரவு தெரிவித்தார்.

கவிஞராகவும், இலக்கியராகவும், திருவள்ளுவரின் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்ந்தவர் கருணாநிதி. திருக்குறள், தமிழன்னை ஆகியவற்றின் மீது அவர் வைத்திருந்த பற்று எனக்கு நீங்கா நினைவுகளாக உள்ளன. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை வெற்றிகரமாக அமைத்ததற்கு முதல் வாழ்த்து தெரிவித்தவர் மு.க.ஸ்டாலின். அதையும் என்னால் மறக்க முடியாது.  இமயமலையின் பகுதியில் இருந்து கருணாநிதிக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு முன்னாள் பிரதமர்கள் ஹெச்.டி.தேவெ கௌடா, மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து