2-வது டெஸ்ட் இன்று துவக்கம் : லார்ட்ஸ் மைதானத்தில் வாகை சூடுமா இந்தியா?

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
lords india 2018 8 8

லண்டன் : லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இங்கிலாந்துடன் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியா வென்ற நிலையில், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் எட்பாகஸ்டனில் நடைபெற்றது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. கேப்டன் விராட் கோலி மட்டுமே அந்த டெஸ்டில் தன்னந்தனியாக போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்க முயன்றார். இந்திய அணியில் அஸ்வின், இஷாந்த், உமேஷ் ஆகியோரும், இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு இதில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில் முதல் வெற்றியுடன் தந்த ஊக்கத்துடன் இங்கிலாந்து இப்போட்டியை எதிர்கொள்கிறது.

லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் புல்தரையுடன் காணப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக பந்தை ஸ்விங் செய்ய முடியும். கடைசியாக இங்கு இரு அணிகளும் மோதிய டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது.

இங்கிலாந்தில் நிலவும் வரும் சூழ்நிலை, மைதானத்தின் தன்மையை இந்திய வீரர்கள் அறிந்து கொண்டாலும், முடிவில் சோபிக்க தவறி விடுகின்றனர். இந்தியாவுக்கு கவலை தருவதாக மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை அமைந்துள்ளது. 3-வது பேட்ஸ்மேன் நிலை கவலை தருவதாக உள்ளது. அந்த இடத்தில் அநேகமாக புஜாரா களமிறக்கப்படலாம். மேலும் லோகேஷ் ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கேப்டன் விராட் கோலி 4-வது பேட்ஸ்மேனாகவும், ரஹானே 5-வது பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவர். ரஹானே மீண்டும் தனது பார்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷிகர் தவன் ஆட்டமும் எடுபடவில்லை. தவன் பார்மில் இல்லாத நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.

டெஸ்ட் ஆட்டங்களில் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். நான்கு நாள் ஓய்வில் இந்திய அணி முதல் டெஸ்டில் தான் புரிந்த தவறுகளை சரி செய்யும் வகையில் உள்ளது. அணி நிர்வாகத்துக்கும் இந்த ஓய்வு இரண்டாம் டெஸ்ட்டுக்கு திட்டமிட சரியான வாய்ப்பைத் தந்துள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் அதிகளவில் பேசப்பட்டார். ஆனால் அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 7 விக்கெட்டை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இரண்டாவது ஆட்டத்திலும் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் பிரதான இடத்தை வகிப்பார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். உமேஷ் சரியாக பந்துவீசாத நிலை உள்ளது. காயத்தால் அவதிப்படும் புவனேஷ்குமார், பும்ரா லார்ட்ஸ் டெஸ்டில் இடம் பெறும் வாய்ப்பு இல்லை.

விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக்கே தொடர்ந்து நீடிப்பார். பேட்டிங்கிலும் கோலிக்கு உறுதுணையாக செயல்பட்டார். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாகும். புஜாரா அணியில் சேர்க்கப்பட்டால் பேட்டிங் வரிசை வலிமை பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசுவது இங்கிலாந்துக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இஷாந்துக்கு துணையாக உமேஷ், சமி ஆகியோர் சரியான அளவில் பந்து வீசுகின்றனர். கூடுதலாக கேப்டன் கோலி அபார பார்மில் உள்ளது அணிக்கு பெரிய பலமாகும். மொத்தத்தில் லார்ட்ஸ் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது என்பதால் இரண்டாம் டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து