முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: கொடியேற்றுத்துடன் துவங்கியது

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆவணி மூலத்திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான ஒன்று ஆவணி மூலத்திருவிழா, கருங்குருவி உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், பிட்டுக்கு மண்சுமந்த லீலை போன்ற வைபவங்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிசேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றன.
நாரைக்கு முக்தி கொடுத்தல்
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறும். தினமும் மீனாட்சி சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது. 15 - ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவணி மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் 16 - ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல். 17 - ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18 - ம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என ஆவணி மூலத்திருவிழா நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதி உலா செல்கின்றனர். 20 - ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது. 21 - ம் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷிபத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவிலுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
பிட்டுக்கு மண்சுமந்த லீலை
விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23 - ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிட்டுத்தோப்புக்கு செல்கின்றனர். சுவாமி - அம்மன் கோவிலில் இருந்து புட்டுத்தோப்பு பகுதி செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனுத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 26 - ம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து