ஆறாவதுபடைவீடு சோலைமலை முருகன்கோவிலில் 108 மயில்காவடிகள் 36வகையான அபிஷேகங்கள் நடந்தன
அலங்காநல்லூர்.- புதுகோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக அழகர்மலை உச்சியில் உள்ள முருகபெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவிலுக்கு சுமார் 130 கி.மீ. பாதயாத்திரையாக 6வது நாள் வந்து சேர்ந்தனர்.அங்கு கோவில் 4 பிரகாரங்களிலும் மேளதாளம் முழங்க காவி ஆடைகள் அணிந்தவாறு பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி மூலவர் சன்னதி முன்பாக வந்து சேர்ந்தனர்.அங்கு சுவாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபுதி, சந்தனம், உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தது.பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.பின்னர் மாலையில் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.