ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட்தேர்வு : மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      இந்தியா
Neet issue(N)

Source: provided

புது டெல்லி : 2019-ம் ஆண்டு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு நடைபெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 முறை நடத்த...

மருத்துவ பட்டப்படிப்புக்கு தகுதி பெறுவதற்காக, நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற முறையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ்ஜவடேகர், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சில திளங்களுக்கு முன்பு தெரிவித்தார்.  2019-ம் ஆண்டு பிப்ரவரி, மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். இது ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

திட்டம் இல்லை...

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2019-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019-ம் ஆண்டு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. ஆப்லைன் முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசித்த வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை...

சுகாதாரத்துறை, மனித வளத்துறைக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 2019-ல் பிப்ரவரி, மே மாதம் என இரண்டு முறை தேர்வு நடத்தும் முறை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. என்றாலும், பேப்பர்- பேனா முறையிலேயே தேர்வு தொடர வேண்டும் என்று சுகாதாரத்துறை வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து