முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பாபிஷேக விழா தொடங்கியது - திருப்பதியில் பக்தர்களின் கூட்டமின்றி வெறிச்சோடிய ஏழுமலையான் கோயில்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதற்காக கோயிலில் உள்ள யாக சாலையில் 28 ஹோம குண்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் யாக பூஜை நடைபெற உள்ளது. இதற்காக 44 வேத வல்லுநர்கள், 100 வேத பண்டிதர், 20 வேத பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சதுர்வேத பாராயணம், புராணங்கள், ராமாயணம், மகா பாரதம், பகவத் கீதை போன்றவை ஓதப்பட உள்ளன.

இந்த முறை மகா கும்பாபிஷேக காலத்தில் சர்வ தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் உட்பட அனைத்து வகை தரிசனத்துக்கும் பக்தர்களை அனுமதிப்பதில்லை என தேவஸ்தானம் முதலில் அறிவித்தது. இதற்கு பீடாதிபதிகள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, குறைவான அளவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தி னார். இதனால், 16-ம் தேதி வரை, தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என அறிவித்தது. நேற்று முன்தினம் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க வந்திருந்தனர்.

குறிப்பாக, அலிபிரி மலையடி வாரத்தில் எப்போதும் வாகனங் கள் அணிவகுக்கும் சோதனைச் சாவடி, பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. தங்கும் அறைகளும் காலியாக காணப்பட்டன. இதேபோல, தலை முடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் வழங்குமிடம், ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் கொடுக்குமிடம் என அனைத்தும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி யது.

மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வகேசவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர், வசந்த மண்டபம் அருகே உள்ள புற்றில் மண் சேகரிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு கோயிலுக்குள் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து