முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பன்னிரெண்டு வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2018-க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 12 வயது சிறுமியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி குற்றவியல் சட்ட (திருத்தம்) அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்துக்கு மாற்றாக, தற்போது இந்த குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2018 கொண்டுவரப்படுகிறது.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் கடந்த ஜூலை 30 - ம் தேதி நிறைவேறியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த இந்த குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018- ன் படி, 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அது ஆயுள் சிறையாகவும் நீட்டிக்கப்படலாம். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குறைந்தபட்ச தண்டனையானது 10 ஆண்டு சிறையிலிருந்து, 20 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதாவின் மூலமாக பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸார் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை கட்டாயமாக 2 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட வேண்டும். அதேபோல், மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது. அத்தகைய, வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசுத் தரப்பு வழக்குரைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதிக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து