முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமுமே வளர்ச்சிக்கான பாதை: பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களுமே வளர்ச்சிக்கான பாதை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின்  56-ஆவது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடையே பேசியதாவது:

21-ஆம் நூற்றாண்டுக்கான குறியீடாக புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆராய்ச்சி செய்யும் சூழல்களை மேம்படுத்தும் விதமாக, உயர்கல்வி அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு உந்துதல் அளிக்கப்படுகிறது.

ஐ.ஐ.டி. நிறுவனங்களுக்காகவும், அவற்றின் கண்டுபிடிப்புகளுக்காகவும் தேசம் பெருமை கொள்கிறது. ஐ.ஐ.டி. நிறுவனங்களின் வெற்றி காரணமாகவே, நாடு முழுவதுமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன.

அவை ஐ.ஐ.டி.க்களை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதால், உலகில் அதிக தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உலக அளவில் இந்தியாவுக்கான அடையாளத்தை தந்துள்ளன. அதிகளவிலான ஐ.ஐ.டி. மாணவர்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தை கட்டமைத்துள்ளனர்.

நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு தரமான கல்வியும், போதிய திறன்களும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி தேவையாக இருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழில்நுட்பத்தின் மூலமாக தேசத்தை கட்டமைப்பதற்காகவே ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியர்கள் கடின உழைப்பாளர்கள், புத்திசாலிகள் என்று கருதப்பட்டனர். தற்போது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஓர் இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் பலர் இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முன்னணி பிரதிநிதிகளாக உள்ளனர்.

அத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில, பல்வேறு தேசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னணியிலும் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் புத்தாக்கமும், புதிய தொழில்நுட்பமுமே உலகில் வளர்ச்சிக்கான பாதையை தீர்மானிப்பவையாக இருக்கும்.

5ஜி அகண்ட வரிசை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை, பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் குறிக்கோளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஐ.ஐ.டி.க்கள், தொழில்நுட்பத்தை கற்பதற்கான ஓர் கல்வி நிறுவனங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் உருமாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் இருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கான முக்கிய ஆதாரம், ஐ.ஐ.டி.க்களாகும்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனங்களே, இந்தியாவை ஓர் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளமாக இருக்கப்போகின்றன.

அடல் புத்தாக்க திட்டம் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலமாக, தொழில்முனைவோருக்கான சூழலியலைக் கொண்ட உலகின் 2-ஆவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மையமாக இந்தியா மேம்பட்டு வருகிறது.

புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத சமூகம் தேக்கமடைந்துவிடும். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான இலக்காக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

அதற்கான புதிய யோசனைகள் யாவும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி வளாகங்களில் தோன்றுகிறதே தவிர, அரசு அலுவலகங்களில் அல்ல.  என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து