முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இயற்கை பேரிடரால் ரூ. 8316 கோடி அளவுக்கு சேதம் முதல்கட்ட மதிப்பீட்டில் தகவல்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

 திருவனந்தபுரம்,கேரளாவில் 5 நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.1924-ம் ஆண்டுக்கு பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.   ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் பலத்த மழை சற்று குறைந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேதங்களை மாநில அரசு கணக்கெடுத்து வருகிறது. கடந்த 1924-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான மழை மற்றும் வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட மதிப்பிட்டில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் பினராய்  விஜயனும் உறுதிபடுத்தியுள்ளார். ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 5 நாட்கள் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 39 பேர் பலியாகியுள்ளனர். 186 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட 15-ம் தேதி வரை கேரளாவில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து