முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாக பணிகளை மேற்கொள்ளக் கூட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கு  கூட ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தீர்ப்பாயத்தில் வழக்கு....

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், அரசு உத்தரவுப்படி அந்த ஆலைக்கு கடந்த மே மாதம் 28-ம் தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர். இதை எதிர்த்து வேதாந்தா குழுமம், டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்டெர்லை ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளை மட்டும் மேற்கொள்ள கடந்த 9- ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம், வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கியது.

மேல்முறையீட்டு மனு

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைப்படி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும். ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயமோ ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையடுத்து, தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

திறக்க அனுமதிக்க...

நிர்வாக பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கினால், ஆதாரங்கள், ஆவணங்களை ஆலை நிர்வாகம் அழித்து விடும் வாய்ப்பு உள்ளது என்று மனுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஆலையில் எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வரி தாக்கல் உள்ளிட்ட விவகாரங்களை பார்க்கவும், நிர்வாக பணிகளுக்காகவும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து