முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரம்பமாகி விட்டது குடும்பச் சண்டை : தி.மு.க.வில் பணத்தை வாங்கிக் கொண்டு பதவி தருகிறார்கள் - அழகிரி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்து ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், அவரது மகன் மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டி மூலம் அவரது குடும்பச் சண்டை மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. தி.மு.க. விசுவாசிகள் தன்பக்கம்தான் உள்ளனர் என்று கூறியுள்ள மு.க. அழகிரி தி.மு.க.வில் பணத்தை வாங்கிக் கொண்டு பதவி தருகிறார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

என் பக்கம்தான்...

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மு.க. அழகிரி நேற்று தனது குடும்பத்துடன், கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.

அழகிரி கூறுகையில்,

எனது தந்தையிடம் எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள அனைத்து தி.மு.க. தொண்டர்களும் என் பக்கம்தான் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கட்சியில் இல்லை...

அப்போது, ஆதங்கம் சொந்த விஷயமா? கட்சி தொடர்பானதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார். இன்று நடைபெறும் தி.மு.க. செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே, தி.மு.க. செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார் அழகிரி.

மீண்டும் குழப்பம்...

கட்சி மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் 2014 மார்ச் மாதம் 25-ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் மு.க. அழகிரி. இந்த நிலையில், கருணாநிதி மறைவால், தி.மு.க.வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவே அழகிரியின் பேட்டி சிந்திக்க வைக்கிறது.

இதற்கிடையே, மு.க. அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பழைய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. வின் முக்கிய தலைவரும், கருணாநிதிக்கு இணையாக இருந்தவருமான ஒருவர், அழகிரியை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததாகவே இருக்கட்டும், மீண்டும் கட்சிப் பதவி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும், அவருக்கு கட்சிப் பதவி அளித்தால்தான் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கும் மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி: உங்கள் ஆதங்கத்திற்கு என்ன காரணம்?

பதில்: பல ஆதங்கங்கள் இருக்கு. அதையெல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்.

கேள்வி: நீங்கள் மறுபடியும் தி.மு.க.வில் இணைந்து செயல்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

பதில்: அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

கேள்வி: நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களா?

பதில்: நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார் அல்லவா? தி.மு.க.வில் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் டி.வி. சேனலில் பேட்டி அளிக்கக் கூடாது என்று படித்தேன். அப்புறம் அதற்கு என்ன அர்த்தம். பிறகு எப்படி என்னைக் கட்சியில் இழுப்பார்கள்?

கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்துள்ள நிலையில் இதுபோன்ற நிலையை அவர்கள் எடுப்பது சரியா?

பதில்: அவர்களைக் கேளுங்கள். ஏற்கெனவே கூறியுள்ளேன். 6 மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும் ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றால் கட்சி சின்னாபின்னமாகி விடும்.

கேள்வி: பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசத் தயாரா?

பதில்: அதெல்லாம் அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். அந்த நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன? ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டுப் பேசுவீர்களா?

பதில்: கண்டிப்பாக என் ஆதரவாளர்களிடம் எப்போதும் நான் பேசுவேன். தற்போது ஒன்றும் ஆக்டிவா இருக்க மாட்டோம். நேரம் வரும் போது காலம் பதில் சொல்லும் என்று சொன்னேன் அல்லவா? காலம் பதில் சொல்லும்.

கேள்வி: கட்சியில் உங்களை இணைக்க மாட்டேன் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: எனக்கென்ன தெரியும். எனக்குப் புகழ் இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பயம் இருக்கிறது. நான் வந்தால் தலைவராகி விடுவேன் என்ற எண்ணமாக இருக்கலாம்.

கேள்வி: குடும்ப உறுப்பினர்களிடம் அல்லது மற்றவர்களிடம் பேசி சரி செய்யலாமே?

பதில்: குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. யாரும் நான் கட்சியில் வருவது பற்றி பேசியதில்லை.

கேள்வி: இப்போது இருக்கும் சூழ்நிலையில் தி.மு.க. சரியாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: சரியாகச் செயல்பட்டால் எப்படி டெபாசிட் போகும். என்ன கேள்வி இது?

கேள்வி: ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கட்சிக்கு மேலும் சில பின்னடைவு என்பது உங்கள் ஆதங்கமா?

பதில்: ஆமாம். வரிசையாகத் தோற்கிறார்கள், கட்சிக்காரன் தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்,  அண்ணா காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இதைக்கேட்டு எப்படி எடுத்துக் கொள்வான் சொல்லுங்கள்? இதெல்லாம்தான் என் ஆதங்கம். அதுவுமில்லாமல் காசு வாங்கிக் கொண்டு பதவி கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு செயலாளர் இருந்தால் ஒரு துணைச் செயலாளர் இருப்பார். இப்போது பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள்.  இவ்வாறு அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

அழகிரியின் இந்த பகிரங்க பேட்டிகள் மூலம் அவரது குடும்பச் சண்டை மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் இன்று தி.மு.க. செயற்குழு கூடுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து