முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றம்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2.08 லட்சம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அதிகளவு நீர்வரத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் கனஅடி...

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து, வினாடிக்கு 1.50 லட்சம்  கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போன்று, கபினி அணையில் இருந்து 50.08 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 2.08 லட்சம்  கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ல் இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 1.81 லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு...

தற்போது கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து கூடுதலாக வெளியேற்றப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்று வந்து சேரும். தற்போதைய நிலவரப்படி, நீர்வரத்து 87 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீதம் திறக்கப்படுகிறது. இது நீர்வரத்தை பொறுத்து மேலும் அதிகரிக்கப்படும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதன் எதிரொலியாக, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.32 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.982 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, நாகை உள்ளிட்ட 9 மேற்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 90 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

குற்றால அருவிகளில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அங்கு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருப்பினும் நெல்லை மாவட்டத்துக்கு வெள்ள அபாயம் இல்லை என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

குமரியில் இன்று விடுமுறை

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் பவானி மற்றும் காவிரி ஆற்றங்கரைகளில் செல்பி எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால் அதை கண்காணிக்க 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொட்டும் மழை...

தமிழகம் இப்படி என்றால் கேரளாவையும் மழை புரட்டி புரட்டி எடுக்கிறது. அங்கு வரலாறு காணாத மழை பெய்திருப்பதால் அண்டை மாநிலங்களின் உதவி தேவை என்று கோரியிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன். அனைத்து உதவிகளையும் செய்யப்படும் பிரதமரும் உறுதியளித்துள்ளார். கேரளாவில் அனைத்து அணைகளுமே திறக்கப்பட்டு எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து