முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள் ஆதங்கம்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுற்றுப்பயணம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் ‘சரண்டர்’ ஆனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

கடும் அதிருப்தி

முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோல ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். மோசமான தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு ரவிசாஸ்திரியும், கோலியும் “எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கம் இல்லை” என்று தெரிவித்து இருந்தனர்.

ரசிகர்களிடம் மன்னிப்பு

தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

ஹர்பஜன்சிங் கண்டனம்

இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டு மொத்த தோல்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பேற்று காரணத்தை தெரிவிக்க வேண்டும். முன்பு வார்த்தைகளை கொட்டினீர்கள். இப்போது வாய்திறங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஆதரங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.

பயிற்சியாளராக....

துருவ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற இயலாது. அதிகமான பயிற்சி ஆட்டம் அல்லது கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும். தவான், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர், கருண்நாயரை அணிக்கு கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெரியவில்லை....

அமித் என்பவர் கூறும்போது, எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கு ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் வாரியம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அனுராக் என்ற ரசிகர், “இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ரவிசாஸ்திரிக்கு தெரியவில்லை. இதனால் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், “ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்கு பேரழிவு. இதனால் அவரை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

ஜாகீர்கானை...

ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், “ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்க இதுவே சரியான நேரம். டிராவிட்டை பேட்டிங் பயிற்சியளாராகவும், ஜாகீர்கானை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல ரவிசாஸ்திரிக்கு எதிராக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து