முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - ஜனாதிபதி - பிரதமர் - தலைவர்கள் இரங்கல்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 22-ம் தேதி வரை தேசியக்  கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாஜ்பாய் உடல் அவரது இல்லத்தில்   வைக்கப்படவுள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கவலைக்கிடம்...

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரதமர் வாஜ்யாய் (93)டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாகவே, வாஜ்பாய் உடல்நிலை மோசமாகி வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் நேற்று முன்தினம் இரவு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 05.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

எய்ம்சுக்கு சென்ற பிரதமர்...

முன்னதாக வாஜ்பாயின் உடல்நிலையில், நேற்று முன்தினம் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மோசமான நிலைக்குச் சென்றது. உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து வாஜ்பாயின் குடும்பத்தாரிடமும் பேசிய பிரதமர் மோடி, அவரது உடல்நிலையைக் கேட்டறிந்தார்.

நேற்று காலை முதல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

வாழ்க்கை வரலாறு

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் 1924 டிசம்பர் 25-ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ். தொண்டர். 1977-ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது  ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய். பாரத ரத்னா, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும்...

40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 1996-ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். நாட்டின் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வாஜ்பாய்.

அணுகுண்டு சோதனை....

அமெரிக்காவுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் நான்கு வழிச்சாலை அமைத்தார். இதுவே இந்தியா முழுக்க பலகோடி வர்த்தகம் நடக்க காரணமாக அமைந்தது. அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற  வாஜ்பாய் உரை நிகழ்த்துவதிலும் வல்லவர். அவரது சொற்பொழிவு பார்ப்போரையும், கேட்போரையும் கட்டிப் போடும் பேச்சுக்கு சொந்தக்காரர். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும், வாஜ்பாயும் நெருங்கிய நண்பர்கள்.

ஜனாதிபதி இரங்கல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாஜ்பாய் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். முன்னாள் பிரதமரும், உண்மையான இந்திய அரசியல்வாதியுமான அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய தலைமைப் பண்பு, தொலைநோக்கு பார்வை, முதிர்ச்சி, பேச்சுத் திறன் அவரை தன்னிகரற்றவராக நிறுத்தியது. அடல்ஜி எனும் மாபெரும் மனிதரின் இல்லா குறையை அனைவரும் உணருவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு இந்தியாவை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு சகாப்தத்தின் நிறைவாகும். அவர் தேசத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய குடும்பத்தினர், பா.ஜ.க.-வினருக்கு இது மிகவும் சோகமான நிகழ்வாகும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவருடனான நிறைய நினைவுகள் உள்ளன. என்னைப் போன்ற ஒவ்வொரு பா.ஜ.க.-வினருக்கும் அவர் தலைசிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரின் கூர்மையான சிந்தனையும், நகைச்சுவை உணர்வையும் என்றும் என் நினைவில் இருக்கும். வாஜ்பாயின் வலிமையான தலைமையின் கீழ் சக்திவாய்ந்த 21-ம் நூற்றாண்டு உருவாக காரணமாக இருந்தது.

தனிப்பெரும் சக்தியாக....

அவருடைய கொள்கைகள் பலதரப்பட்ட மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய் அவர்களின் கடுமையானப் போராட்டங்களால் தான் பா.ஜ.க. ஒவ்வொரு படியாக வளர்ந்தது. இந்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அதனால் தான் பா.ஜ.க. தனிப்பெரும் சக்தியாக உருவானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

வாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் !

1. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லக்ஷ்மிபாய் கல்லூரியில்தான் அவர் முதுகலை பட்டத்தை முடித்தார்.
2. வாய்பாயின் தந்தைய கிருஷ்ண பிகாரி வாஜ்பாய். பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்தவர். இவர், சிறந்த கவிஞரும் கூட. தந்தையை போன்று வாஜ்பாயும் கவிப் புலமை கொண்டவர். தேச பற்று மிகுந்த கவிதைகளை வாஜ்பாய் படைத்துள்ளார்.
3. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டபோதே அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.
4.1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை  இணைத்துக் கொண்டார்.
5. வாஜ்பாய் பேச்சாற்றல் மிக்கவர். ஒருமுறை வாஜ்பாய் பேச்சை கண்டு முன்னாள் பிரதமர் நேருவே வியந்துபோனார். அப்போது, வாஜ்பாய் வருங்காலத்தில் பிரதமர் ஆவார் என நேரு கணித்திருந்தார்.
6. வாஜ்பாயின் பேச்சு திறமை மற்றும் நிர்வாகத் திறமை ஜன சங்கத்தில் அவர் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தது.
7. நெருக்கடி காலத்தில் சிறைக்கு சென்றவர் வாஜ்பாய் (1975-1977).
8. 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.
9. மக்களவை எம்.பியாக 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபாவிற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
10.கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து