முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வுக்கு வந்தேன் ஜனாதிபதி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு, தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மேன்மை, கண்ணியத்தால் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்வுக்கு வந்ததாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யாவுக்கு, ராம்நாத் கோவிந்த் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:                  

வாஜ்பாயின் மறைவு, உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி எனக்கும் தனிப்பட்ட இழப்பாகும். அவரது மேன்மை, கண்ணியத்தால் ஈர்க்கப்பட்டுதான், சட்டத் தொழிலை விட்டுவிட்டு, பொது வாழ்வுக்கு வந்தேன்.

நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரதமராக திகழ்ந்தவர் வாஜ்பாய். அவரது மறைவுக்கு, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் வருந்துகிறது.

அவரது அரசியல் வாழ்வு பெருமை மிகுந்தது. சுதந்திர போராட்ட வீரர், சிறந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர், நாடாளுமன்றவாதி, சிறந்த நிர்வாகி என பன்முகங்களில் மிளிர்ந்ததன் மூலம் எண்ணிலடங்கா இதயங்களை கவர்ந்தவர்.

இந்திய அரசியலின் பல்துறை வித்தகர் வாஜ்பாய் என்றால் அது மிகையல்ல.

விசாலமான மனதுடைய அவரது மறைவால், இந்தியா மட்டுமன்றி உலகமே வருந்துகிறது.

நாட்டின் பிரதமராக இருந்த காலகட்டங்களில், நெருக்கடியான, சவாலான சூழ்நிலைகளில் பண்புடனும், முடிவெடுக்கும் திறனுடனும் செயல்பட்டவர் வாஜ்பாய்.

இதற்கு, கடந்த 1998-இல் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை, 1999-இல் நிகழ்ந்த கார்கில் போர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளே சாட்சியாக உள்ளன.

நான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், வாஜ்பாயிடம் ஆசி பெறுவதற்காக சென்றேன். அப்போது, அவர் படுக்கையில்தான் இருந்தார். என்னை நோக்கி கண்ணசைவுகள் மட்டுமே இருந்தன. அதையே, அவரது ஆசியாக உணர்ந்தேன்.

அவரை இழந்து வாடும் நண்பர்களுக்கும், அவரை பின்பற்றுவோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாஜ்பாயின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அந்த இழப்பை தாங்கும் வல்லமையை இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று தனது கடிதத்தில் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து