முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,இந்தியா - பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த உதவி செய்யத் தயாராய் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துகளை வரவேற்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில், அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டுரையில்  வெளியிட்ட பதிவுகளில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தொடங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெளியிட்டிருந்த சாதகமான கருத்துகளை சீனா தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த கருத்துகளை சீனா வரவேற்கிறது.

தெற்காசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகவும் முக்கியமான நாடுகளாகும்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மிகவும் நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை வாயிலாக தங்களிடையேயான பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதை சீனா உறுதியாக ஆதரிக்கிறது.

அதேபோல், இரு நாடுகளும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் சீனா ஆதரிக்கிறது.

தெற்காசிய பிராந்திய வளர்ச்சி, அமைதி ஆகியவற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக உறுதிபூண்டுள்ளன என்று சீனா நம்புகிறது.

இந்த நோக்கத்துக்காக சீனா ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபட விரும்புகிறது என்றார் அவர்.
அப்போது லூ ஹாங்கிடம், ஆக்கப்பூர்வமான பணி என்பதை இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்படும் மத்தியஸ்தம் என்ற அர்த்தம் கொள்ளலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

சாத்தியமிருந்தால், சீனா ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பணியில் ஈடுபட விரும்புகிறது. மத்தியஸ்தமா என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது.

தக்க நேரத்தில், தக்க சூழ்நிலையில், சீனா தனது பணியை மேற்கொள்ளும் என்றார் லூ காங்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும், பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் திடீர் பயணம் மேற்கொண்டார்.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், பயங்கரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என்றும் இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது.

இதேபோல், பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புவதாகவும், 3ஆவது நாட்டின் சமரசத்தை ஏற்க முடியாது எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது.


இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்த உதவி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து