முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகுல் சோக்ஸிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்:இன்டர்போல் அமைப்பு பரிசீலனை

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

புதுடெல்லி, கடன் மோசடி செய்து தப்பியோடிய மொகுல் சோக்ஸிக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, அடுத்த மாதம் பரிசீலிக்க இருப்பதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கு மேல் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மொகுல் சோக்ஸிக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்க வேண்டும் என்று இன்டர்போல் அமைப்பில் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து, சோக்ஸி சார்பில் இன்டர்போல் அமைப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "அரசியல் சூழ்ச்சியின் காரணமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும், அங்குள்ள சிறைகளின் நிலை குறித்தும், சுகாதார நிலை குறித்தும் பெருத்த சந்தேகம் நிலவுகிறது' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அடுத்து, "ரெட் கார்னர் நோட்டீஸ்' மீதான பரிசீலனையை அந்த அமைப்பு நிறுத்திவைத்தது. இந்நிலையில், 5 பேர் கொண்ட குழு ஒன்று, அடுத்த மாதம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நோட்டீஸ் அளிப்பது தொடர்பாக பரிசீலிக்க உள்ளதாக இன்டர்போல் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ஏற்கெனவே "ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரிட்டனுக்கு, இந்தியாவின் சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, "சோக்ஸி இந்தியாவிலிருந்து தப்பிப்பதற்கு முன்பாகவே, அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டே, ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டின் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல், அதிகாரப்பூர்வமாக அந்த நாட்டின் குடிமகனாக மாறியுள்ளார்' என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டின் குடிமகனாக சோக்ஸி இருப்பதால், அவர் மீதான "ரெட் கார்னர் நோட்டீஸ்' பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், அவரை நாடு கடத்துவதற்கு அந்நாடு தயக்கம் காட்டி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து