முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை, மும்பையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உடல்நலக் குறைவு இருப்பதாகவும், சிறையில் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் இந்திராணி முகர்ஜி தெரிவித்த காரணங்களை நீதிபதி ஜே.சி.ஜக்தாலே நிராகரித்தார். இந்திராணி முகர்ஜி சிறையில் பாதுகாப்பான அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், சிறை வளாகம் மிகுந்த கண்காணிப்பில் இருப்பதாகவும் சி.பி.ஐ. முன்வைத்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். , ஊடகத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதலாவது கணவருக்கும் பிறந்த மகள் ஷீனா போரா.

மும்பை மெட்ரோ ரயில் நிலைய மேலாளராக பணியாற்றி வந்த ஷீனா போரா, மேல் படிப்புக்காக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாக இந்திராணி கூறி வந்தார். இதற்கிடையே, ஆயுத வழக்கு ஒன்றின் தொடர்பாக, இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம்வார் ராயை காவல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடீர் திருப்பமாக, இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோருடன் தானும் இணைந்து ஷீனா போராவை 2012-ஆம் ஆண்டில் கொலை செய்ததாக தெரிவித்தார்.

கொலை செய்து, மூன்றாண்டுகள் மறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையை மறைக்க துணை போனதாக, அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து