முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; பெட்ரோல் விலை உயர்வு: பிரதமர் தலைமையில் 15-இல் அவசர ஆய்வு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (செப்.15) அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் வரலாறு காணாத உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அணிவகுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவுகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜீவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை காலையில் ரூ.72.91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட ரூபாயின் மதிப்பில் 12.3 சதவீதம் அளவுக்கு ஏற்பட்ட சரிவாகும்.

எனினும், புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி, ரூபாயின் மதிப்பில் 51 காசுகள் உயர்ந்து ரூ.72.18-ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை மத்திய அரசு குறைக்கக் கூடும் என்றும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீழ்ச்சியின் பாதிப்புகள்: ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக நாட்டின், அந்நிய செலாவணி பரிமாற்றம் தொடர்புடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கான செலவினமும் அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோர் விலை விகிதம் கடந்த மாதம் 3.69 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்த விலை விகிதம் கடந்த அக்டோபர் மாதம் 3.58 சதவீதமாக இருந்தது.

எல்லாவற்றையும்விட, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதேபோல், நாடெங்கிலும் பொதுமக்களிடமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிருப்தி நிலவுகிறது. முழுஅடைப்புப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்தின.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வளர்ச்சித் திட்ட செலவினங்களை குறைக்காத நிலையில், மத்திய அரசுக்கான வருவாயை குறைக்கச் செய்யும் வகையில் கலால் வரி குறைப்பை மேற்கொள்ள முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து வருகிறது.

மத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

அதேசமயம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளன. மத்திய அரசும் இதேபோன்று கலால் வரியை ரூ.2 குறைக்கும்பட்சத்தில், ரூ.30,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என நிதியமைச்சகம் கணக்கிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்த செலவினம் சற்று கூடுதலாக உள்ளது. இதன் எதிரொலியாகவே, பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது. நாட்டிலேயே குறைவான கலால் வரி விதிக்கப்படும் தில்லியில் அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.87-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97-ஆகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து