முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.15,000 கோடியில் புதிய கொள்முதல் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய ஆதார விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ரூ.15,000 கோடியில் புதிய வேளாண் பொருள்கள் கொள்முதல் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நிகழாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய கொள்முதல் கொள்கை அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொள்கையின்படி, விளைபொருள்களைக் கொள்முதல் செய்வது, விளைபொருள் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி அளிப்பது, விளைபொருள்களின் விலை சரிவடையும்போது இழப்பீடு அளிப்பது ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டங்களை மாநில அரசுகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டங்களை அடுத்த 2 ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதற்காக, ரூ.15,053 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில், ரூ.6,250 கோடி நிகழாண்டில் செலவிடப்படும். விவசாயிகளின் வருவாயை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதற்காக, முன்னெப்போதும் இல்லாத அளவில் முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு: இதனிடையே, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு நேரிட்ட இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, ரூ.218 கோடி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்: இதனிடையே, தென் ஆப்பிரிக்கா, புரூனை ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளித் துறையில் ஆய்வு நடத்துவதில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே ஜோஹன்னஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல், தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவுவதில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக, இந்தியா-புரூனை இடையே தில்லியில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எகிப்துடன் ஒப்பந்தம்: விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்காக, எகிப்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து