முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல்: காங்கிரஸ் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய ராணுவத்தில் 1 லட்சம் வீரர்களை குறைப்பது உள்ளிட்ட மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமையிலான குழு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமையில் ராணுவ உயரதிகாரிகள் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:

ராணுவத்தின் பல்வேறு கட்டமைப்புகளை சீரமைப்பு செய்வது, தேவைப்பட்டால் வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது, விரைந்து தாக்குதல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாக, தளவாட கொள்முதலை மாற்றுவது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவ தளபதிகளின் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

குறிப்பாக, ராணுவ நடவடிக்கைகள் பிரிவு, தளவாட கொள்முதல் பிரிவு ஆகியவற்றில் முக்கிய சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. டெல்லியில் ராணுவ தலைமையகத்தில் இருக்கும் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவின் டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இந்திய ராணுவ பயிற்சி டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம், ஷிம்லாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவ பயிற்சி கமாண்ட் அலுவலகத்துடன் இணைக்கப்படவுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கையில், 1 லட்சம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து