என்னை ஏன் சேர்க்கவில்லை என ஸ்டாலினிடம் கேளுங்கள் நிருபர்களிடம் அழகிரி காட்டம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
Alagri1 14-09-2018

சென்னை,தி.மு.க.வில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. வின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த அழகிரி கட்சியில் இருந்து  நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின் நடந்த தேர்தல்களில் எல்லாம் தி.மு.க.வுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பின் அழகிரி அமைதி பேரணி நடத்தினார். தி.மு.க.வில் தன்னைச் சேர்ப்பார்கள் என அழகிரி காத்திருந்தார். ஆனால் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனிடையே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என அழகிரி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அழகிரி மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அழகிரி பதிலளித்தார்.

உங்களுக்கு தொடர்ந்து தி.மு.க.வில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது, ஏன்?

அது அவரை (ஸ்டாலினை) கேட்க வேண்டிய கேள்வி, அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

பழனி மாணிக்கம், முல்லை வேந்தன் போன்றோரை சேர்த்துக் கொண்டார்கள். உங்களை மட்டும் ஏன் சேர்க்க மறுக்கிறார்கள்?

பழனி மாணிக்கத்தை எப்போது நீக்கினார்கள்.

தேர்தல் தோல்வியில் நீக்கப்பட்டு பின்னர் கடிதம் கொடுத்து சேர்த்துக் கொண்டார்களே?

அதைத்தான் நானும் சொல்கிறேன். என்னை ஏன் சேர்க்கவில்லை, இது போன்ற கேள்விகளை அவரைப் போய் கேளுங்கள். அங்கு கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து