முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா உருவாக்கிய கட்சியையும் ஆட்சியையும் அழிக்க துடிக்கும் தினகரனுக்கு மன்னிப்பே கிடையாது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் , அழிக்க நினைக்கும் தினகரனை மன்னிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-டி.டி.வி. தினகரன், 10 வருடங்கள் எங்கு போனார் என்றே தெரியவில்லை, வனவாசம் போய் விட்டார். ஜெயலலிதா மறைந்தார். உடனே வந்து விட்டார். அந்த குடும்பம் செய்த சேட்டை எவ்வளவு தெரியுமா? மேடையிலே இருக்கிற நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எவ்வளவு தான் உழைத்தாலும் இடையிலே சென்று ஒரு சறுக்கலை ஏற்படுத்தி விடுவார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் டி.டி.வி. தினகரன் இன்றைக்கு பேசுகிறார். இந்த ஆட்சி எத்தனை நாள் இருக்கும்? அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டனர். அந்த குடும்பம் முழுவதும் அ.தி.மு.க.-வை சுரண்டிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவை ஏமாற்றி பிழைத்து கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை அ.தி.மு.க. அரசு விரட்டி அடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். எந்த நோட்டு என்று உங்களுக்குத் தெரியும். அதை வைத்து ஏமாற்றி, தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்று விட்டார். இப்பொழுது சொல்கிறார்.

இந்த ஆட்சி நிற்காது. இந்த கட்சி இருக்காது என்று சொல்கிறார். அ.தி.மு.க.-வினால் வளர்க்கப்பட்ட இந்த டி.டி.வி. தினகரன். நீங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியது அ.தி.மு.க. வும், ஜெயலலிதாவும். அவருக்கே நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். அது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இந்தக் கட்சியை அழிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் அதிகாரத்தில் இருக்கும் பொழுதே நிலைத்து நின்றவர்கள் நாங்கள். நீங்கள் எத்தனை தூரம் எங்களை காலி பண்ண நினைத்தீர்கள் என்று எங்களுக்கும் தெரியும். எத்தனை தினகரன் வந்தாலும் எனக்கு கவலையில்லை.

இவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சரவை அமைத்து சென்ற எம்.எல்.ஏ.க்களை மந்திரியாக்கி விடுவாராம். பாவம், அதை நம்பி எம்.எல்.ஏக்கள் சென்று விட்டார்கள். ஜெயலலிதா உருவாக்கிய இந்தக் கட்சியை அழிக்க நினைக்கின்றார். இந்த ஆட்சியை அழிக்க நினைக்கின்றார். அவரை மன்னிக்க முடியாது. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் நமது தொண்டர்கள். ஒவ்வொரு தொண்டரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இரு பெரும் தலைவர்களின் லட்சியத்தை நாம் காப்பாற்ற வேண்டும். நம் கட்சிக்கு என்றைக்கும் அழிவு கிடையாது. அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து