முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக அதிகரிப்பு: தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக்காகவே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் அம்மா. மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் அம்மா.

பரிந்துரைகள்... அம்மா வகுத்த பாதையில் செயல்படும் இந்த அரசு, ஏழாவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட "அலுவலர் குழு, 2017"-இன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

9 சதவீதமாக...தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி  இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரார்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக இரண்டு சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7  சதவீதத்திலிருந்து 9  சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.4,500 வரை...இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புக்களின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு  மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்பப்  பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314/- முதல் ரூ.4,500/- வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157/- முதல் ரூ.2,250/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். 
சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் / எழுத்தர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும்.

பதினெட்டு லட்சம்... இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை, 2018 முதல் ஆகஸ்டு, 2018 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர், 2018 மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157/- கோடியாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து