முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை வைத்திருந்தார் :முதல்முறையாக தமிழகத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டம் துவக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டும்தான் காவலர்களுக்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கலைவாணர் அரங்கத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

அமைதி பூங்கா...காவல் துறை எல்லா காலங்களிலும் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, நெருக்கடியான தருணங்களில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பொது ஒழுங்கை சிறப்பாக பேணி பாதுகாக்கும் துறையாக விளங்கி வருகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையை வைத்திருந்தார். ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவ வேண்டும். இப்பணியினைத்தான் நமது காவல் துறையினர் சிறப்பாக செய்து, தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக திகழச் செய்கின்றனர். 

அமைதியுடன் ...காவல் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து சமூக விரோதிகளை சண்டையிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினை தமிழ்நாட்டில் முழுவதுமாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதை திறம்பட செய்து வந்தாலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், முக்கியமான அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், இயற்கை சீற்றங்களை சமாளித்தல், பல்வேறு சமூக சட்ட விதிகளை செயல்படுத்துதல் போன்ற விரிவான பணிகளை செய்து வருகின்றீர்கள். நீங்கள் பணி செய்யும் போது, சில சமயங்களில், ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாவதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நீங்கள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற ஆன்றோரின் வாக்குப்படி அமைதியுடன் பணியாற்றி வருகிறீர்கள்.

மனிதநேய பண்புகள்....இதை மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சென்ற வருடம் பெய்த பெருமழையின் போது காவல் துறையினர் குழுக்களாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையில் உதவி புரிந்துள்ளனர். சென்னை பெருமழையின் போது, சாலையில் தேங்கியிருந்த நீர் வடியும் பொருட்டு, ஒரு காவல் ஆய்வாளர் மழைநீர் வடிகாலில் இறங்கி அடைப்புகளை நீக்கியது, தாய் தந்தையை இழந்த ஒரு மாணவனை, தத்தெடுத்த ஒரு காவல் உதவி ஆணையர், 72 வயதான ஒரு முதியவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பேரனைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற உங்களின் பல்வேறு மனித நேயப் பணிகளை பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், மக்களும், நாங்களும் பார்த்து பாராட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

நிறைவாழ்வு பயிற்சி...காவல் துறையினரும், அவர்தம் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த அரசு நன்கு அறியும். எனவே, காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக மிகுந்த பரிசீலனைக்குப் பின்பு, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே இந்த ஏற்றமிகு “காவலர் நிறைவாழ்வு பயிற்சி” திட்டம்.  இந்த திட்டம் பெங்களூரில் உள்ள, உலகத்தரம் வாய்ந்த “நிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால், தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகும்.

தமிழகத்தில் மட்டும்தான்....இந்தியாவிலேயே, ராணுவத்திலோ அல்லது துணை ராணுவத்திலோ கூட இம்மாதிரியான பயிற்சி இதுவரை அளிக்கப்படவில்லை. காவல் துறையின் உயர் அதிகாரி முதல் கடைநிலை காவலர் வரை அனைவருக்கும் இம்மாதிரியான பயிற்சி வழங்கவிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான். அனைத்து மாவட்டம் மற்றும் காவல் பிரிவுகளிலும், சிறப்புப் பிரிவுகளிலும் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும். இதற்கென, காவல் துறையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.

2 வருடத்திற்கு தொடர் பயிற்சி...அடுத்த ஒரு வருட காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பின்னர், முதன்மைப் பயிற்சியாளர்கள் மூலம் 2 வருட காலங்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதிக அளவு மன அழுத்தம் உள்ளோருக்கு, தனியாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது தமிழ்நாடு காவல் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் சுமார் 1,20,000 காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள சுமார் 3,60,000 குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது. காவல் துறையினரும் அவரது குடும்பத்தினரும் இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மன நிம்மதியை வழங்கும்....இந்த நிறைவாழ்வு பயிற்சியின் வாயிலாக, தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மனநலன் மேம்படுத்தப்பட்டு, காவலர்கள் அவர்தம் பணிகளை மேலும் புத்துணர்ச்சியுடனும், சிறப்புடனும் செயல்பட வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் காவலர்களின் குடும்பங்களிலும் நல்ல அமைதியான சூழ்நிலை உருவாகும். தனிமனித அமைதி, குடும்ப அமைதியாக மாறும்; குடும்ப அமைதி, மாநில அமைதியாக மாறும்; மாநில அமைதி, நாட்டு அமைதியாக மாறும்; ஒரு நாட்டின் அமைதி, உலக அமைதியாக மாறும். இந்த நிறைவாழ்வு பயிற்சி உங்களுக்கு வாழ்விலும், பணியிலும், மன நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் என நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து