Idhayam Matrimony

ஈழப்படுகொலையில் தி.மு.க. துரோகத்தை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிப்பு சேலத்தில் முதல்வர் - தேனியில் துணைமுதல்வர் பங்கேற்பு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஈழத்தில் தமிழர் படுகொலையில் துரோகம் செய்த தி.மு.க.வை கண்டித்து வரும் 25ம் தேதி நடைபெற இருக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார்கள்.இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதலுடன் வெளியிடபட்ட அ.தி.மு.க. தலைமைக்கழக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தீர்மானம் நிறைவேற்றம்....ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்டதற்கும், லட்சக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு ரகசியமாக செய்த உதவிகளை, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கோரத் தாக்குதலுக்கு உதவிய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தோர் போர்க்குற்றம் புரிந்ததை விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று கடந்த 19-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்கூட்டங்கள்... அதன் அடிப்படையில், இலங்கையில் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ரகசியமாய் உதவி செய்ததை மூடி மறைத்து, அக்கொடூர படுகொலையில் தங்களுக்கு பங்கில்லை என்பது போல் இதுநாள்வரை கபட நாடகம் ஆடிவந்த தி.மு.க.-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும், ஈழத்தில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்; ஈழப் போரில் தி.மு.க.-காங்கிரஸ் தலைமைக்கு இன்னும் என்னென்ன வகைகளில் தொடர்புகள் இருந்தன என்பதை விசாரிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் மன உணர்வாகும். தமிழக மக்களின் மன உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமானால், போர்க் குற்றச் செயல்களில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 25ம் தேதி வருவாய் மாவட்டம் வாரியாகப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

முதல்வர் - துணை முதல்வர்...அதன்படி வரும் 25ம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அவருடன் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் கலந்து கொள்கிறார். சேலத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து