முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் கழிவுநீர் கலப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் அவகாசம்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்கு 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய, தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரியில் கழிவுநீர் கலப்பதை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து 6 மாதங்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக் கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றத்தில் இறுதி ஆய்வறிக்கையை கடந்த ஜூலை 14-இல் தாக்கல் செய்தது. அதில், காவிரியின் துணை ஆறுகளான தென்பெண்ணை, அர்க்காவதியில் கழிவுகளின் அளவு வரம்பை விட மீறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள நதிகளின் நீர், தர அளவுகோலை எட்டும் வகையில் தொழிற்சாலைக் கழிவுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், கழிவுகளை சுத்திகரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒரு விரிவான நடவடிக்கையை கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் தேவை உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்கு 8 வாரங்களுக்குள் மத்திய, தமிழக, கர்நாடக அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து