முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

குமரி,கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று மாலை 3 மணியளவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாகர்கோவில் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மாவட்டத்தில் நடந்து முடிந்த பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

30 மாவட்டங்களில் சிறப்பாக நடந்தது....எம்.ஜி.ஆரின் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காகவே இருந்தது.  அவருடைய வழியை பின்பற்றி அம்மா, ஏழை, ஏளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார். எம்.ஜி.ஆரது நினைவை போற்றும் வகையிலும், அவர் மக்கள் நலனுக்காக ஆற்றிய பணிகள், அவரது  வரலாறு ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையிலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மிக சிறப்பாக கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, இதுவரை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மாணாக்கர்களுக்கு பரிசு....இவ்விழா  நடைபெறும் மாவட்டங்களில், எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள்  மற்றும் அரசியல் மூலம் அவர்கள் ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

கண்கவர் அரங்கங்கள்....மேலும், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப் புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டன. மேலும், அந்தந்த மாவட்டங்களில் அனைத்து அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கண்கவர் அரங்கங்கள் அமைக்கப்பட்டன.

ரூ.67.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.....அந்த வகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  இன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று,  எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.13.07 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.31.34 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலம் கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும், 14,911 பயனாளிகளுக்கு ரூ.67.27 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

பிற்பகலில் இன்னிசை நிகழ்ச்சி....இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கிறார்.  மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு என்.தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை குழு செயலாளரும், மத்திய விமான துறை நிலைக்குழு உறுப்பினரும், குமரி மாவட்ட தொலைபேசி ஆலோசனை குழு தலைவருமான வழக்கறிஞர் அ.விஐயகுமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.  கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, நன்றியுரையாற்றுகிறார். இன்று பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை எம்.ஜி.ஆரின் புகழை போற்றும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து