முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அமராவதி,போலீசாரை அவமதிக்கும் வகையில், தரக்குறைவாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், அவர்களின் நாக்கை வெட்டி விடுவோம் என்று ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜி.சி.திவாகர் ரெட்டி. இவரின் சொந்த ஊரான தாதிபத்திர அருகே ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டபின் மோதல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எம்.பி. ஜே.சி. திவாகர் ரெட்டி கடந்த இரு நாட்களாக போலீசாரை கடுமையாக விமர்சித்து வந்தார். என்னுடைய சொந்த ஊருக்கு அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடக்கிறது. ஆனால், போலீசார் அந்த மோதலைக் கட்டுப்படுத்தாமல், திருநங்கைகள் போல் இருந்தார்கள். கலவரத்தைப் பார்த்து போலீசார் பயந்து ஓடிவிட்டார்கள். நான் கூட ஓடிவிட்டேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், எம்.பி. திவாகர் ரெட்டியின் விமர்சனத்தைப் பொறுக்க முடியாத ஆனந்தபுரா மாவட்டம், காத்ரி நகர இன்ஸ்பெக்டர் மாதவ்  ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். 

அவர் கூறுகையில்...எம்.பி. திவாகர் ரெட்டி பேசியதற்கும், மற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எங்கள் விமர்சித்ததற்கும் நாங்கள் எதிர்வினையாற்றாமல் பொறுமையாக இருக்கிறோம். ஆனால் இனிமேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசினால் பொறுமையாக இருக்க மாட்டோம். நாக்கை அறுத்து விடுவோம். இனி மேல் போலீசாருக்கு எதிராகப் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். போலீசாரின் ஒழுக்கத்தைப் பற்றி பேசும் யோசித்து பேசுங்கள்.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போலீஸாருக்கு எதிராகப் பேசும் போது எங்களின் தார்மீக ஒழுக்கம் புண்படுத்தப்படுகிறது. நாங்கள் இந்த போலீஸ் வேலைக்கு வரும் போது ஆண்களாகத்தான் வந்திருக்கிறோம் திருநங்கைகளாக வரவில்லை என்று எச்சரித்தார்.

இதையடுத்து, எம்.பி. திவாகர் ரெட்டி கடும் ஆத்திரமடைந்து இன்ஸ்பெக்டர் மாதவுக்கு துணிச்சல் இருந்தால், அவர் இருக்கும் இடத்தைக் கூறட்டும் நான் செல்கிறேன் என் நாக்கை அறுக்கட்டும். உங்களுடைய காக்கி சீருடையைக் கழற்றிவிட்டு வாருங்கள், நானும் சாதாரண ஆடையில் வருகிறேன் என்று சவால் விடுத்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவ் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திவாகர் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து