முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில்,விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும். நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சபாநாயகர் தலைமை...கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா துவங்கி நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பெருமக்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், விஜயகுமார் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு:-

2 படகுகள், ரோப்கார்....கன்னியாகுமரிக்கு மட்டும் வருடந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் 75 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.  இவர்களில் சுமார் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே தற்போது விவேகானந்தர் பாறையிலுள்ள நினைவு மண்டபத்திற்கு படகின் மூலம் செல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவில் புதியதாக 2 படகுகள் வாங்கப்பட உள்ளன. மேலும், ஒரே சமயத்தில் 3 படகுகள் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு ஏதுவாக கூடுதலாக 2 படகு அடையும் தளங்கள் 20 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

ஒரு கடல் வழி பாலம்... கூடுதலாக, கன்னியாகுமரியிலிருந்து விவேகானந்தர் பாறை செல்ல ரோப் கார் வசதியும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல ஒரு கடல் வழி பாலம் ஆகியவை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன்மூலம், சுற்றுலா பயணிகளுடைய எண்ணம் நிறைவேறும். இந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், குறிப்பாக கன்னியாகுமரியில் இருக்கின்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மாநகராட்சியாக மாற்றம்...விளவங்கோடு வட்டத்தினை பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கிள்ளியூர் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கல்குளம் வட்டத்தினை பிரித்து, செருப்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவட்டார் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகவும் மற்றும் செண்பகராமன் புதூர்  துணை மின் நிலையத்தின் மின்பளுவை குறைக்கும் வகையிலும் ஒரு புதிய 230 / 110 கி.வோ. வளிமகாப்பு துணை மின் நிலையம் 368 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் தக்கலையில் அமைக்கப்படும். எல்லைகள் மறுசீரமைப்பு குழுவின் பணி நிறைவடைந்தவுடன் நாகர்கோயில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். 

பழையாற்றின் குறுக்கே...அழகியபாண்டிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும். அகஸ்தீஸ்வரம் வட்டம், தாமரைக்குளம் கிராமத்தில், பழையாற்றின் குறுக்கே 5 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை ஒன்று கட்டப்படும். அகஸ்தீஸ்வரம் வட்டம், கோவளம் கிராமத்தில் 12 கோடியே 75 லட்சம்  ரூபாய் மதிப்பிலும், அழிக்கல் கிராமத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பெரியநாயகி தெருவில் 7 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலும் தூண்டில் வளைவுகள் 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். விளவங்கோடு வட்டம், மேல்மிடாலம் கிராமத்தில் 10 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தூண்டில் வளைவு 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும்.

ஒரு தூண்டில் வளைவு... கிள்ளியூர் ஒன்றியம், இணையம்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட இணையம் கிராமத்தின் கிழக்கே, தேவாலயம் இருக்கும் பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தூண்டில் வளைவு 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். விளவங்கோடு வட்டம், மார்த்தாண்டம் துறை கிராமத்தில் சர்ச்சுக்கு முன்னால் இடதுபக்கம் மற்றும் வலதுபக்கம் உள்ள வீடுகளை பாதுகாக்கும் பொருட்டு, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலரிப்பு தடுப்பு சுவர் 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். 

உயர்மட்ட பாலங்கள்...தோவாளை, தாடிக்காரன்கோணம், கீரிப்பாறை லேபர் காலனி சாலையில் 0/2 கி.மீட்டரில் கீரிப்பாறை ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும்.  திருவட்டார், பேச்சிப்பாறை, குட்டியூர் தச்சமலை சாலையில், 0/2 கி.மீட்டரில் கிழவியூர் ஆற்றின் அருகில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். தோவாளை, திடல் ஊராட்சிப் பகுதியில், காடுகரை-இறைவிபுதூர் சாலையில் 0/2 கி.மீட்டரில் கஞ்சியாற்றின் குறுக்கே, தற்போதுள்ள பழுதடைந்த குறுகிய பாலத்திற்குப் பதிலாக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். குருந்தன்கோடு, தல்லாக்குளம், இரணியல்-முட்டம் சாலை முதல் தல்லாக்குளம் சாலையில், 0/2 கி.மீட்டரில் வள்ளியூர் ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். 

சிறுபாலங்கள், மேம்பாலங்கள்....பெருஞ்சால்விளை சாலையில் கிமீ.1/6-ல் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். வட்டக்கோட்டை -அம்சி சாலையில் கிமீ. 6/6-ல்  45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் கட்டப்படும். குஞ்சிருப்புவிளை - மாதாபுரம் சாலையில் கிமீ.0/6-ல் 35 லட்சம் ரூபாய்  மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். தேசிய நெடுஞ்சாலை எண். 47-ல் கோட்டார் - செட்டிகுளம் பகுதியில் சுமார் 340 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். இதற்கு நில எடுப்பு பணிக்காக அம்மாவுடைய அரசு 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண். 47-B  வடசேரி - ஒழுகினசேரி பகுதிகளில் ஒர் உயர் மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 89 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை கிடைத்தப் பின் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கீழ் 2018-19 திட்டத்தில் 8 சிறுபாலங்கள் 159 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மார்த்தாண்டம் - கருங்கல் சாலை கி.மீ. 1/8-ல் ரயில்வே கி.மீ. 259/500- 600 -ல் குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையங்களுக்கிடையே கடவு எண்.15-க்கு மாற்றாக சாலை மேம்பாலம் கட்டப்படும்.

புதிய டயாலிசிஸ் கருவிகள்...கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள 100  மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதை அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே, மாணவர்கள் சேர்க்கை 150 இடங்களாக உயர்த்தப்படும்.  கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு,  8 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கேத் லேப் கருவி மற்றும் 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 5 புதிய அதிநவீன டயாலிசிஸ் கருவிகளும் நிறுவப்படும்.

ஆரோக்கிய மையம்...கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் 20 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும். விளவங்கோடு அரசு மருத்துவமனைக்கு எண்ணியல் ஊடுகதிர் கருவி, மீயொலி பரிசோதனைக் கருவி போன்ற மருத்துவக் கருவிகள் வழங்கி மேம்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஸ்டாலின் மீது தாக்கு....இதற்கிடையே விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார். இந்த அரசு மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்று பேசிய முதல்வர் எடப்பாடி, பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என்றும் காட்டமாக தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் பட்டியலிட்ட அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சை முடித்தார். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நாகர்கோவில் நகரமே கலை கட்டி காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து