முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஈரானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 6 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது :-

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 5 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒருவரும் சென்றனர். அவர்களை ஈரானிய கடலோர காவற்படை கடந்த 1-ம் தேதியன்று பிடித்தனர். ஈரானிய கடல் எல்லை விதிகளை மீறியதாகக் கூறி தமிழக மீனவர்களை கிஷ் என்ற தீவுக்கு கடலோர காவற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

குடும்பத்தினர் பாதிப்பு

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே அவர்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவர்கள் தவித்து வருவதாகத் தெரிகிறது. மேலும், மீனவர்களில் சிலருடைய விசாக் காலம் முடிவடைந்துள்ளது. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் நீண்ட நாள்களாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வருவாயை மட்டுமே நம்பி வாழும் குடும்பத்தினர் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய அறிவுறுத்தல்....

மேலும், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர். எனவே, தாங்கள் இந்தப் பிரச்னையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதருக்கு உரிய அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும். பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்குவதுடன், அப்பாவி ஏழை மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திட தூதரை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து