முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழுகி கிடக்கும் உடல்களால் நோய் பரவும் அபாயம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை இடுகாடாக அறிவிக்க இந்தோனேஷிய அரசு பரிசீலனை

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஜகார்தா,இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியான ஏராளமான பேரது உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் அழுகி வருவதால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியைக் கைவிட்டு, அந்தப் பகுதிகளை இடுகாடாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் கூறியதாவது:-சுலாவெசி தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,649-ஆக உயர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இடிபாடுகளில் 8 நாள்களுக்கும் மேல் அழுகிய நிலையில் உடல்கள் சிக்கியுள்ளதால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, மீட்புக் குழுவினருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மிகுந்த கவனத்துடன் உடல்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய்களிலிருந்து மீட்புக் குழுவினரை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களை அப்படியே விட்டு விடவும், அந்தப் பகுதியை இடுகாடாக அறிவிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் விராந்தோ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து