ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றுக்கு நிஷிகோரி தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      விளையாட்டு
Kei Nishikori 2018 10 7

டோக்கியோ,ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மூன்றாம் நிலை வீரர் நிஷிகோரி தகுதி பெற்றுள்ளார்.
இரு முறை சாம்பியனான நிஷிகோரி, அரையிறுதி ஆட்டத்தில் 7-6, 6-1 என்ற நேர் செட்களில் 8-ஆம் நிலை வீரர் ரிச்சர்ட் கேஸ்கட்டை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். நிஷிகோரி ஏற்கெனவே 2012, 2014-இல் ஜப்பான் ஓபன் பட்டம் வென்றுள்ளார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வெதேவ் 6-3, 6-3 என கனடாவின் டெனிஸ் ஷபலோபவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடந்தது.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் சீன ஓபன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் யு.எஸ். ஓபன் சாம்பியன் நவோமி ஒஸாகா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் லாட்வியாவின் அனஸ்டிஜா செவஸ்டோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் ஒஸாகாவின் கனவு தகர்ந்தது. யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம், பான்பசிபிக் ஓபனில் இரண்டாம் இடம் பெற்றிருந்தார் அவர். மற்றொரு அரையிறுதியில் சீன வீராங்கனை வாங் குயாங்கை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி.

அதே நேரத்தில் ஆடவர் பிரிவில் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் இரண்டாம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 7-6, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 61-ம் நிலை வீரர் துனிசியாவின் மலேக் ஜஸிரியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். நான்காம் நிலை வீரர் பேபியோ போக்னினி 6-4, 6-3 என ரஷ்ய வீரர் ருப்லேவை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து