அறிமுக டெஸ்டில் சதம்: பிரித்விஷாவுக்கு கோலி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      விளையாட்டு
virat kohli interview 2018 2 14

ராஜ்கோட்,மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அஸ்வின் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 6 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 18 வயதான பிரித்விஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவரை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிரித்விஷா தனது முதல் டெஸ்டிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. அவர் மாறுபட்ட திறமை கொண்டவர். அதனால்தான் டெஸ்ட் அணிக்குள் நுழைய முடிந்துள்ளது. கேப்டன் பார்வையில் இருந்து இது உற்சாகமூட்டுகிறது. ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவர் போட்டிகளில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர். பவுலர்களுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில் முகமது ஷமி அருமையாக வீசினார்.

இங்கிலாந்து, இந்தியா நிலைமைகளை ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மிகப் பெரிய சவால். இங்கு நம்மிடம் உள்ள திறமைகளுக்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது புரிந்ததே. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் பற்றி பேசக் கூடாது. அவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து மாறுவார்கள். எதிரணி என்ன செய்யப் போகிறது என்பதில் கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் துல்லியமாக வென்றோம் என்று மட்டுமே கூற முடியும். இவ்வாறு கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து