இண்டர்போல் தலைமை அதிகாரி லஞ்சம் பெற்றதாக ஒப்புதல் - சீனாவின் தகவலால் பரபரப்பு

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
Interpol chief china 2018 10 8

பெய்ஜிங் : இண்டர்போல் தலைமை அதிகாரியான மெங் ஹாங்வே லஞ்சம் பெற்றதாக ஒப்புக் கொண்டார் என்று சீனா வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்தவர் மெங் ஹாங்வே. சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான இண்டர்போல் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இண்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வே தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி கடந்த வாரம் புகார் செய்திருந்தார்.

முன்னதாக இன்டர்போல் அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது. தற்போது மெங் ஹாங்வே தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கடந்த மாதம் சீனா சென்றதாகவும் , அப்போது அவரை சீன போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆனால் எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை. சீனாவின் சட்ட விதிகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இண்டர்போல் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக மெங் ஹாங்வே அறிவித்துள்ளார். தற்போது விசாரணையில் மெங் ஹாங்வே லஞ்சம் பெற்றதாக ஒப்பு கொண்டு உள்ளார் என சீனா அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து