தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்திட வேண்டும் - தமிழகத்திற்கான ரூ. 8,699 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      தமிழகம்
cm edapadi meet pm modi 2018 10 8

புது டெல்லி : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்திட வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 8,699 கோடி பங்கு தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். 

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த  மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், அம்மாவுக்கும் தமிழக அமைச்சரவை ஒருமனதாக பரிந்துரை செய்ததை ஏற்று, பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை என்றைக்கும் நினைவு கூறும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் என பெயரிட வேண்டுமென்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதையும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்திலே வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் உள்ளாட்சி அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டுமென்றும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமரை வலியுறுத்தி உள்ளேன். சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் சுமார் ரூபாய் 4,445 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து வெள்ளத் தடுப்புப் பணி மேற்கொள்வதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டுமென்றும்,  2017-18-ம் ஆண்டின் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான 5,426 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். 

தமிழகத்தின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் ரூபாய் 17,600 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு உரிய அனுமதியும் நிதியும் வழங்க வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும் உதவித் தொகையை தொடர்ந்து வழங்கிடவும், தமிழ்நாட்டிற்கான நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வேண்டுமென்றும் பிரதமரிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன்.

புயலினால் காணாமல் போகும் மீனவர்களை தேடி, மீட்டு வர ஏதுவாக, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தர கப்பல் படை தளம் அமைக்க வேண்டுமென்றும்,  தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக வர வேண்டிய 8,699 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்குத் தொகையை உடனே விடுவிக்க வேண்டுமென்றும், மத்திய அரசு திட்டத்தின்கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்றும் பிரதமரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க ஆவன செய்யுமாறும், ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்திற்கு விமான போக்குவரத்து சேவையினை உடான் திட்டத்தின் கீழ் விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும்,  தென்னை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில், கிலோவிற்கு 75 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். இவை குறித்து விரிவான கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து