தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை கோலாகல துவக்கம் புனித நீராட நிபந்தனைகளுடன் கோர்ட் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
madras-high-court 2017 7 17

சென்னை,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி  மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது. இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். இந்த விழாவை முன்னிட்டு தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அந்த விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி ஆற்றில் இந்த ஆண்டு மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த மகா புஷ்கர விழா நாளை தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி சிருங்கோரி காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர

விழா பூஜைகள் நடைபெறுகின்றன. இதற்காக பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. பாபநாசத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அகஸ்தியர் உள்ளிட்ட மாமுனிகள் வசிக்கும் பூமியில் வற்றாத ஜீவநதியாகப் பாய்ந்தோடும் தாமிரபரணியில் நீராடுவதன் மூலம் முக்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் மகாதேவன் என்பவர், திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி புஷ்கர விழா 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின் போது தாமிரபரணி ஆற்றின் முக்கிய தீர்த்த கட்டங்களான குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம் ஆகியவற்றில் பக்தர்கள் நீராட இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரும் ஏற்கெனவே தடை விதித்துள்ளனர். இந்தத் தடையை நீக்கி பக்தர்கள் புனித நீராட அனுமதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மகாராஜன் கூறியதாவது:-
மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடங்கள் ஆற்றின் ஆழமான ஆபத்தான பகுதிகளாகும். எனவே, நீராட வரும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் பகுதிகளில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதியில் நீராட அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் கடந்த 8-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியதும் தாமிரபரணி நதியில் செல்லும் நீர் வரத்து, நீர் அளவு, மழை, பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 துறைகளிலும் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். இதையடுத்து புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து