வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்லி புயல் இன்று கரையை கடக்கிறது - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      உலகம்
Titli storm 2018 10 10

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் இன்று கரையைக் கடக்கவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தீவிர புயலாக...

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது ஒடிசாவில் இருந்து 320 கி.மீ., தொலைவில் மையம்கொண்டுள்ள இந்த புயலானது இன்று ஒடிசாவின் கோபால்பூர்-கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு அக்டோபர் 11 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு அக்டோபர் 14 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும் லூபன் புயல் வலுப்பெற்று ஓமனிலிருந்து 610 கி.மி. தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாறு பகுதியில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

5 மாவட்டங்கள்...

வங்க கடலில் நிலை கொண்டுள்ள டிட்லி புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒடிசாவில் 5 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய வங்க கடலில் நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது புயலாக மாறி, வரும் 11-ம் தேதி, ஆந்திரா - ஒடிஷா மாநிலங்களில் கரையோர பகுதியில் கரையை கடக்கும் என புவனேஷ்வரில் உள்ள மத்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்த புயலுக்கு டிட்லி என பெயரிடப் பட்டுள்ளது. இப்புயல், வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில், மணிக்கு சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.

வீடுகளில் வெள்ளம்

நேற்று முன்தினம் மாலை இப்புயல் ஒடிசாவின் கோபால்பூருக்கு 560 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இதனால், இந்த இரு மாநில மீனவர்களும் மீன் பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலோர ஆந்திரா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்தநிலையில் இந்த டிட்லி புயல் மேலும் நகர்ந்து ஓடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆந்திராவின் கலிங்கப் பட்டினம் - ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என தெரிகிறது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த மலை பெய்து வருகிறது. கஞ்சம், கஜபதி, பூரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒடிசாவில் 879 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 அவசர படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பு மாறு ஒடிசா அரசு உத்தர விட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து