ஜி.எஸ்.டி. மூலம் வரிவிதிப்பு முறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது - துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பெருமிதம்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
venkaiah naidu 2018 10 10

புதுடெல்லி : ஜி.எஸ்.டி. மூலம் வரிவிதிப்பு முறையில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

கோவை இந்திய தொழில், வர்த்தக சபையின் 90-ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கோவை மண்டலத்தின் வணிகம், தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு இந்திய தொழில், வர்த்தக சபை பெரும் பங்காற்றி வருகிறது. பம்ப்செட், பொறியியல், ஆட்டோமொபைல்ஸ், மென்பொருள், மோட்டார், மின்னணு, ஜவுளி, பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறைகளில் கோவை மண்டலம் சிறந்து விளங்கி வருகிறது.

தொழில் முனைவோரின் உழைப்பே கோவை, திருப்பூர் நகரங்களின் வளர்ச்சிக்குக் காரணம். இந்த நகரங்கள் நாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களின் சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடுதல், சீரிய முறையில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமாகவே ஒரு நகரத்தை பொலிவுறு நகரமாக உருவாக்க முடியும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே, அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் தற்போது உலகம் சந்தித்து வரும் பிரதான பிரச்னையாக உள்ளது. எனவே, இயற்கையை நேசித்து, இயற்கையோடு இயைந்து வாழ மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. இந்த சமூகத்தில் வாழும் அனைவரின் கடமை ஆகும்.

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டபோது வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை தொழில் அமைப்பினர் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று விரி விதிப்பில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

வரிவிதிப்பு மூலமாகவே நாட்டுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த சமூக அமைப்பு மூலமாகவே வருவாயை உருவாக்க முடியும். பொதுமக்கள் வரியை முழுமையாகச் செலுத்தி, அரசிடம் இருந்து கட்டமைப்பு வசதியை எதிர்பார்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. மூலம் வரி விதிப்பு முறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து